பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 360 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்களும், பாகிஸ்தான் அணி 264 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.

இதையடுத்து 54 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை துவக்கியது. உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட் ரன்கள் எதுவும் எடுக்காமலும், வார்னர் 6 ரன்கள், லபுசேன் 4 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் 50 ரன்கள் எடுத்தும், மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. கேரி 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

பாகிஸ்தான் தரப்பில் அஃப்ரிடி, ஹம்ஸா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி 241 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால், இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!