இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி, 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டெஸ்ட் தொடரில் இந்திய மகளிர் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் முதல் போட்டி இன்று பிற்பகல் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அதில் 40-ல் தோல்வியையும், 10-ல் வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா தனது சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
டெஸ்ட் போட்டியைப் போலவே, ஒருநாள் தொடரிலும் இந்திய அணி அசத்தலாக விளையாடி தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள், தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விளையாடுவார்கள் என்பதால், இன்றைய போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது.