மல்யுத்த கூட்டமைப்பை கண்காணிக்க தற்காலிக குழு... இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு!


வினேஷ் போகட், பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷண் சிங், சஞ்சய் சிங்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் இருந்து வந்தார். இவர் மீது வீராங்கனைகள் பலர் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை அவர் மறுத்து வந்தார். அவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்த நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இருந்து குரல்கள் எழுந்தது. இதனையடுத்து, தலைவர் பதவியில் இருந்து பிரிஜ் பூஷண் சிங் நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்த கூட்டமைப்புக்கு சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் ஆதரவாளரான சஞ்சய் சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சாக்ஷி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீருடன் அறிவித்தார். தொடர்ந்து பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் உள்ளிட்ட முக்கிய வீரர், வீராங்கனைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மல்யுத்த வீரர்கள் போராட்டம்

இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்வதாக, மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம்.சோமையா, மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வீரர்கள் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளின் மேற்பார்வை, வங்கிக் கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கவனிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இமானுக்குப் பதில் சொன்ன சிவகார்த்திகேயன்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

x