இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்க உள்ள நிலையில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என்று சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று துவங்குகிறது.

இதில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரண்டு கேப்டன்களுக்கும், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த நிலையில், டெஸ்ட்டில் இருவரும் களம் காணுவது இருநாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதேபோல் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கைல் வெரீனீ ஆகியோரும் மீண்டும் களமிறங்குகின்றனர்.

தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டீன் எல்கர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியில் கடந்த உலகக்கோப்பை தொடரின் போது, ஒரு போட்டியில்கூட பந்துவீசாத அஸ்வின் இந்த போட்டியில் தனது திறமைகளை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ருதுராஜ் பங்கேற்பாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி இங்கிடி, ரபாடா ஆகியோர் காயத்திலிருந்து மீண்டுள்ளனர். அவர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், இந்த போட்டியில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. 31 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க மண்ணில் இதுவரை நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரைக்கூட இந்திய அணி இதுவரை வென்றதில்லை. இதுவரை 42 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடியுள்ள நிலையில், இதில் தென்னாப்பிரிக்கா அணி 17 போட்டிகளிலும், இந்தியா 15 போட்டிகளில் வென்றுள்ளது. 10 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது.
கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இன்று செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் போட்டியின் போது மழை குறுக்கிடலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 31 ஆண்டு கால காத்திருப்பை இந்தியா பூர்த்தி செய்யுமா, அல்லது அந்த சாதனையை தென்னாப்பிரிக்கா தக்க வைத்து கொள்ளுமா என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி துவங்குகிறது.