தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பர் இவர் தான்!: ராகுல் டிராவிட் பேட்டி!


கே.எல். ராகுல்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சூரியன் மைதானம்

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அனைத்து விதமான போட்டி தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது.

ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இஷான் கிஷன் சொந்த விஷயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். இதனால் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது கே.எல்.ராகுலா அல்லது கே.எஸ்.பாரத்தா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இத்தொடரில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் ராகுல் டிராவிட்

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், ”இஷான் இல்லாத இந்த சூழ்நிலையில் அணிக்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய சில வீரர்கள் இருக்கின்றனர். அதில் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு நல்ல தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். ஆனால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் செய்ததில்லை என்பது தெரியும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக கீப்பிங் பணியைக் கவனிக்கிறார். கடந்த 5-6 மாதங்களாக விக்கெட் கீப்பராக நன்றாக செயல்படுகிறார். எங்களைப் பொறுத்த வரை பேட்டிங் மற்றும் கீப்பிங் ஆகிய இரண்டிலும் அசத்தக்கூடிய அவரை போன்ற ஒருவர் இருப்பதே நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

x