மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வான பின்னர் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்த முன்னணி வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் விஜேந்தர் சிங்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிராக இந்திய மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக முன்னணி வீரரான பஜ்ரங் பூனியாவும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் பதவியை இழந்தார்.
இந்தப் போராட்டத்தின் போது பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஏற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் ஆதரவாளரான சஞ்ஜய் சிங் புதிய தலைவராக தேர்வாகி உள்ளது போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 15 நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், கண்ணீர் மல்க கூறும்போது, “நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம், ஆனால் பிரிஜ் பூஷனின் வணிக கூட்டாளியும் அவரது நெருங்கிய உதவியாளருமான சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார். இதனால் நான், மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன். மல்யுத்த கூட்டமைப்புக்கு ஒரு பெண் தலைவராக வரவேண்டும் என விரும்பினோம். ஆனால் அது நடக்கவில்லை” என்றார்.
இதனிடையே, “மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக பிரிஜ் பூஷணின் உதவியாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் பெண் வீராங்கனைகள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு உள்ளாவார்கள்” என்று முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேதனை தெரிவித்துள்ளார். அதேபோல ஒலிம்பிக் வென்ற வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் சாக்ஷிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விஜேந்தர் சிங், "ஒரு விளையாட்டு வீரராக சாக்ஷி மாலிக்கின் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மல்யுத்த போட்டிகளில் தங்கம் வென்ற அந்த வீராங்கனை வேண்டியது எல்லாம் நீதி மட்டுமே. ஆனால், அது அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், வேதனை அடைந்த அவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதனால், உலக அளவில் இந்தியாவின் பிம்பம் உயருமா, குறையுமா?
ஒட்டுமொத்த விளையாட்டுத் துறையும் ஏமாற்றமடைந்துள்ளது. இதற்குப் பின்னர் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை விளையாடுவதற்கு அனுப்புவார்களா? ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கே நீதி கிடைக்கவில்லை என்றால் தங்களுக்கு எப்படி கிடைக்கும் என்று அவர்கள் கவலை அடைவார்கள். பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் ஏன் இது நடந்தது என்று பதிலளிக்க வேண்டும். இது நீதி அமைப்பின் மீதும், ஜனநாயக கட்டமைப்பின் மீதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்... உயர் நீதிமன்றம் அதிரடி!
செய்யாத குற்றத்திற்கு 48 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த கொடுமை!