ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சீனாவில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த வங்க தேச அணி, 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 51 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 12 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 52 என்ற எளிய இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் கண்டது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா முறையே 7, 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜெமிமா, கனிகா இருவரும் விக்கெட்டை இழக்காமல் ஆட்டத்தை முடித்துவைத்தனர். இந்திய அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணிக்கான பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.