14 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனையை வங்கதேச வீரர் செளமியா சர்க்கார் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வங்கதேச அணி 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கிய நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 2வது ஒரு நாள் போட்டி சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச அணி சார்பில் களமிறங்கிய சௌமியா சர்க்கார், ஆரம்ப முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்பரங்களில் ஆட்டம் இழந்த நிலையில், முஷ்பிகுர்- ரஹீம் ஜோடி சேர்ந்து கணிசமான ரன்களைக் குவித்தனர். 57 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ரஹீம் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடிய சௌமியா சர்க்கார் 151 பந்துகளில், 22 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 169 ரன்கள் குவித்து வில் ஓ’ரூர்க் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 291 ரன்கள் எடுத்திருந்தது.
சிறப்பாக பந்து வீசிய ஜேக்கப் மற்றும் வில் ஓ’ரூர்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். வில் யங் 81 ரன்களும், ரவீந்திரா 45 ரன்கள் ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் களமிறங்கிய ஹென்றி நிக்கோல்ஸ் 95 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து நியூசிலாந்த அணி 296 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து 3வது ஒருநாள் போட்டி வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே 2வது ஒருநாள் போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌமியா சர்க்கார் முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்திய துணைக் கண்டத்தில் இருந்து, ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்தில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமான ரன்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை 14 ஆண்டுகளுக்கு பிறகு சௌமியா சர்க்கார் முறியடித்துள்ளார். இந்த போட்டியில் தோல்வியடைந்த போதும், வங்கதேச அணியின் சௌமியா சர்க்காருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.