வங்கதேச அணி இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இன்று நெல்சன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தது. நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, தொடக்க வீரர் சவுமியா சர்க்கார் 22 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 151 பந்துகளில் 169 ரன்களை விளாசியதுடன், முஷ்பிகுர் ரஹீமுடன் (45) 5வது விக்கெட்டுக்காக 91 ரன்களையும் சேர்த்தார். இதனால் வங்கதேசம் 50 ஓவர்களில் 291 ரன்களை எட்டியது. நியூஸிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, வில்லியம் ஓ ரூர்கே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 292 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூஸிலாந்து அணியின் டாப் 5 வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் அந்த அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 296 எடுத்து வெற்றி பெற்றுத் தொடரையும் வென்றது. நியூஸிலாந்து தரப்பில் வில் யங் 89 ரன்களையும், ரச்சின் ரவீந்திரா 45 ரன்களையும், ஹென்றி நிகோல்ஸ் 95 ரன்களையும், கேப்டன் டம் லாதம் 34, டாம் பிளண்டெட்ல் 34 ரன்களையும் எடுத்தனர். வங்கதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூது 2 விக்கெட்டுகளையும், ஷோரிபுல் இஸ்லாம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் வங்கதேச அணிக்குள் மீண்டும் வந்துள்ள சவுமியா சர்க்கார் அபாரமாக ஆடினார். 58 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன்பின்னர் நிதானமாக ஆடி 116 பந்துகளில் தன் 3வது ஒருநாள் சதத்தை எடுத்து முடித்தார். ஒரு கட்டத்தில் 119 பந்துகளில் 112 ரன்களை எடுத்திருந்த சவுமியா அதன் பிறகு பேயாட்டம் ஆடினார். அடுத்த 32 பந்துகளில் 67 ரன்களை விளாசித் தள்ளினார். இதனால் அவர் 151 பந்துகளில் 169 ரன்களை எடுத்தார். வங்கதேச வீரர் ஒருவர் எடுத்த 2வது அதிகபட்ச ரன்கள் இதுவாகும். இதற்காகவே நியூஸிலாந்து வென்றாலும் ஆட்ட நாயகன் விருது சவுமியா சர்க்காருக்கு வழங்கப்பட்டது.
டுனெடினில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 44 ரன்களில் நியூஸிலாந்து அணி வென்றதையடுத்து, 2வது போட்டியிலும் வெற்றிபெற்று அந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
நிவாரணப் பொருட்களை அனுப்ப கட்டணம் கிடையாது... தமிழக அரசு அறிவிப்பு!
மாரடைப்பால் 7-ம் வகுப்பு மாணவி பலி: பள்ளி செல்லும் போது நடந்த பரிதாபம்!
குளியலறையில் ரகசிய கேமரா: மாணவிகள் அதிர்ச்சி!
வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட மறுத்த அமைச்சர்... 'இனி ஓட்டு கிடையாது...' கொந்தளித்த மக்கள்!