ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.... கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை அணி!


சென்னை அணி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

கொல்கொத்தா அணி

டாஸ் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரை வீச வந்த துஷார் தேஷ்பாண்டே முதல் பந்திலேயே பிலிப் சால்டை அவுட்டாக்கி அரங்கத்தை அதிர வைத்தார். அடுத்து வந்த நரைன், அங்குரிஷ் ரகுவன்ஷி ஜோடி சிறப்பாக ஆடியது. நரைன் 27, ரகுவன்ஷி 24 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். அவர்கள் இருவரும் அவுட்டான பிறகு வந்தவர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். யாரும் சிறப்பாக ஆடவில்லை

கேப்டன் ஸ்ரேயாஸ் 34 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஒரு தவறான பந்தைக் கூட போட்டுவிடக்கூடாது என்ற முனைப்புடன் சிஎஸ்கேவின் பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் வீசினர். துஷார்தேஷ் பாண்டே, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், முஸ்தஃபிசூர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொல்கத்தா அணியை திணறடித்தனர்.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங்கில் இறங்கியது. சிஸ்கே பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். முதலில் இறங்கிய கேப்டன் ருதுராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசி 67 ரன்களுடன் களத்தில் இருந்தார். அதிரடியாக ஆடிய டேரி மிட்செல் 25 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் எடுக்க 17.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது வெற்றியை பெற்றுள்ள சிஎஸ்கே அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது.

x