5 பந்துகளில் 21 ரன்கள்; ஹாரி புரூக் அதிரடி...மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இங்கிலாந்து!


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 பந்துகளில் 21 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றிபெற வைத்துள்ளார் ஹாரி புரூக்.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன.

ஒருநாள் தொடரில் 2-1 என வென்று அசத்தியது மேற்கிந்திய தீவுகள்.தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர் மேற்கிந்திய தீவுகள் அணியினர். அடுத்து டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

ஹாரி புரூக்

முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது நிகோலஸ் பூரண் அதிரடியால் 45 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்தினார். 20 ஓவர் முடிவில் 222/6 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜாஸ் பட்லர் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிலிப் சால்ட் அதிரடி சதமடித்தார். லிவிங்ஸ்டன் 18 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையானபோது ஹாரி புரூக், ரஸ்ஸல் ஓவரில் விளையாடினார். அப்போது அதிரடி காட்டிய புரூக் 4,6,6,2,6 என 5 பந்துகளிலேயே ஆட்டத்தினை முடித்தார். இந்த வெற்றியின் மூலம் 2-1 என தொடரில் மீண்டு வந்துள்ளது இங்கிலாந்து அணி. மீதமிருக்கும் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரினை வெல்ல முடியும்.

56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த பிலிப் சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிலர் ஹாரி புரூக்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்திருக்கலாம் எனவும் பாராட்டி வருகின்றனர்.

x