தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் அணிக்கு கே.எல்.ராகுலும், டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி இதுவரை தென்னாப்பிரிக்காவில் மட்டும் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால், இம்முறை இந்திய அணியின் ஃபார்ம், வீரர்களின் திறன் உள்ளிட்டவை வெற்றிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய அணியின் முக்கிய பந்து வீச்சாளரான முகமது ஷமி விளையாடுவதில் சந்தேகம் என செய்தி வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவை அவர்கள் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடிக்க வேண்டுமானால், ஷமி போன்ற ஒரு பந்துவீச்சாளர் இந்திய அணியில் இருப்பது முக்கியமானதாகும். இந்நிலையில் தான் ஷமி டெஸ்ட் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரிலேயே முகமது ஷமி கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சையில் உள்ள அவர், முழு உடற்தகுதியை எட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஷமி குறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ, “ஷமி தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார். டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவதற்கு முன், அவருடைய உடற்தகுதியை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 1-1 என இந்திய அணி தொடரை சமன்செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்!