2024-ம் ஆண்டு மார்ச்சில் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் நடைபெற உள்ளது. இதனிடையே, வரும் 19-ம் தேதி ஐபிஎஸ் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 333 பேர் ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்களும் அணி வீரர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், 2023 சீசனுக்குப் பிறகு ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 10.7 பில்லியனாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியன் பிரீமியர் லீக்கின் மொத்த பிராண்ட் மதிப்பு 2023 சீசனுக்குப் பிறகு 28% அதிகரித்து, 10.7 பில்லியன் டாலர்களை அதாவது சுமார் ரூ.89,232 கோடியை எட்டியுள்ளது. இந்தத் தகவலை பிராண்ட் மதிப்பீடு ஆலோசனை நிறுவனமான பிராண்ட் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
அதன்படி பார்த்தால், 2008-ல் தொடங்கப்பட்டதில் இருந்து இந்தியன் பிரீமியர் லீக்கின் பிராண்ட் மதிப்பு 433 சதவீதம் அதிகரித்துள்ளது. போட்டிகளை காண பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சி மட்டுமல்லாது ஓடிடி முதல் பல்வேறு வகையான இணைய ஸ்ட்ரீமிங் வாயிலாகவும் ஐபிஎல் போட்டிகளை காண்பது அதிகரித்துள்ளதால், அதன் பிராண்ட் மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள 10 அணிகளில், முதலில் 87 மில்லியன் டாலர் மதிப்புள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மதிப்புமிக்க பிராண்ட் அணியாக திகழ்கிறது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 81 மில்லியன் டாலர் மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே-யைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 78.6 மில்லியன் டாலர், பெங்களூரு அணி 69.8 மில்லியன் டாலர் மதிப்புடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது.
பிராண்ட் மதிப்பைப் பொறுத்த வரையில் குஜராத் டைட்டன்ஸ் தான் அதிக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு 8-வது இடத்தில் இருந்த அந்த அணி, இந்த முறை 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு அதன் பிராண்ட் மதிப்பு 38% அதாவது 65.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இதுபோன்று, டெல்லி அணி 64.1 மில்லியன் டாலர், ராஜஸ்தான் அணி 62.5 மில்லியன் டாலர், ஐதராபாத் அணி 48.1 மில்லியன் டாலர், லக்னோ அணி 47 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. பஞ்சாப் அணி 45.3 மில்லியன் டாலர் மதிப்புடன் மதிப்புமிக்க பிராண்ட் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...