ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் இடைவெளியில் தாங்கள் கொண்டு வந்திருந்த பொம்மைகளை வீசி ரசிகர்கள் மைதானத்தை நிறைத்துள்ள சம்பவம் உலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்தில் உச்சபட்ச தொடர்களாக இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் தொடரும், ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா தொடரும் திகழ்ந்து வருகிறது. இந்த லா லிகா தொடர் ஸ்பெயினின் பல்வேறு பகுதிகளில் தற்போது நடந்து வருகிறது.
இந்த லா லிகா தொடரில் பங்கேற்கும் முக்கிய அணிகளில் ஒன்று ரியல் பெட்டிஸ். இந்த அணியின் சொந்த மைதானமான எஸ்டேடியா பெனிட்டோ வில்லமரின் மைதானத்தில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் இறுதியாக நடைபெறும் போட்டிகளில் ஒரு மரபு பின்பற்றப்படுகிறது.
அதாவது கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட வசதி இல்லாத ஏழை குழந்தைகளுக்கு அளிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்னர் இறுதியாக இந்த மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரசிகர்கள் தாங்கள் கொண்டுவரும் பொம்மைகளை மைதானத்தில் வீசுவர். இந்த பொம்மைகள் ஏழை குழந்தைகளுக்கு அளிக்கப்படும்.
அந்த வகையில் நேற்று எஸ்டேடியா பெனிட்டோ வில்லமரின் மைதானத்தில் ரியல் பெட்டிஸ் - ரியல் சோசைடட் அணிகள் மோதிய ஆட்டத்தின் இடைவேளையின் போது, ரசிகர்கள் தங்கள் கொண்டு வந்திருந்த பொம்மைகளை மைதானத்தில் தூக்கி வீசினர். இந்த வகையில் சுமார் 19,000 பொம்மைகள் கிடைத்துள்ளதாக ரியல் பெட்டிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
35 சென்டிமீட்டருக்கும் குறைவாகவும் பேட்டரிகள் இல்லாதவாறும் உள்ள பொம்மைகளை மைதானத்துக்கு கொண்டுவருமாறு ரியல் பெட்டிஸ் அணி நிர்வாகம் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.