WPL தொடரில் தமிழக வீராங்கனை... டாக்ஸி டிரைவரின் மகள் சாதனை!


கீர்த்தனா

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையை டாக்ஸி டிரைவரின் மகளான கீர்த்தனா பெற்றுள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் மும்பை அணி தரப்பில் ஸ்பின் ஆல்ரவுண்டரான தமிழ்நாடு வீராங்கனை கீர்த்தனா அடிப்படை தொகையான ரூ.10 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் முதல் வீராங்கனை என்ற சாதனையை கீர்த்தனா படைத்துள்ளார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அடுத்த சீசன் மும்பை மற்றும் பெங்களூரு மைதானங்களில் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் மகளிர் கிரிக்கெட் பெரியளவில் வளர்ச்சியடையாத சூழலில், முதல்முறையாக கீர்த்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பின்னால் முன்னாள் கிரிக்கெட் வீரரான அபினவ் முகுந்தின் தந்தை இருக்கிறார்.

அபினவ் முகுந்த் டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார். அபினவ் முகுந்தின் தந்தையான டிஎஸ் முகுந்த், வசதியில்லாத வீரர், வீராங்கனைகளுக்கு கிரிக்கெட் பயிற்சியை இலவசமாக அளித்து வருகிறார். டாக்ஸி ஓட்டுநரின் மகளான கீர்த்தனாவை அப்படிதான் கண்டறிந்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ததோடு, அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ளார்.

அவரின் பயிற்சியின் மூலமாக கிரிக்கெட் வீராங்கனை கீர்த்தனா, தற்போது இந்தியா க்ரீன், தென் மண்டல அணி, ஆரஞ்ச் டிராகன்ஸ் மகளிர் அணி ஆகியவற்றோடு தற்போது மும்பை அணிக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரிஸ்ட் ஸ்பின்னரான இவர், கீழ் நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்யும்சிறந்த பேட்டிங் வீராங்கனையாக திகழ்கிறார்.

முன்னதாக தமிழ்நாடு அணிக்காக விளையாடிய இவர் ஒருநாள் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கீர்த்தனா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இனி தமிழ்நாட்டில் இருந்து அதிகளவிலான வீராங்கனைகள் கிரிக்கெட் பக்கம் திரும்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

x