சூர்யகுமார் யாதவை டி20 உலகக்கோப்பை கேப்டனாக்க வேண்டும் - ஹர்பஜன் சிங் யோசனை!


சூர்யகுமார் யாதவ்

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அதிரடி யோசனை ஒன்றை கூறி இருக்கிறார்.

மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த ஓராண்டாக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடாத நிலையில், அவர்கள் இல்லாத நிலையில் அணியை வெற்றிகரமாக வழிநடத்திய சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியை உலகக்கோப்பைக்கு அனுப்பலாம் என யோசனை கூறி இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

மேலும், ரோகித் சர்மா, விராட் கோலியிடம் அவர்களின் டி20 எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என பிசிசிஐ அமர்ந்து பேச வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார். அதாவது சுற்றி வளைத்து அவர்கள் டி20 உலகக்கோப்பைக்கு வேண்டாம் என்பதை அவர்களிடம் பிசிசிஐ தெரிவிக்க வேண்டும் என்பதை நாசூக்காக கூறி இருக்கிறார்.

ஹர்பஜன் சிங்

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கி அபாரமாக ஆடி 4 - 1 என தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், ட்ராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் சில போட்டிகளில் ஆடிய போதும் இளம் வீரர்கள் மட்டுமே கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இளம் வீரர்களே சிறப்பாக ஆடும் போது அதே அணியை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு அனுப்பலாம் என்பதே ஹர்பஜன் சிங்கின் கருத்தாக உள்ளது.

கோலி ரோகித் சர்மா

அதே சமயம், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பெரிய வீரர்கள் என்பதால் அவர்களை நீக்குவதும் எளிதல்ல என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி ஹர்பஜன் சிங் பேசுகையில், "கடந்த சில போட்டிகளில் சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி சிறப்பாக ஆடியது. இப்போது நம் எதிர்காலம் பற்றி யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா இரண்டும் பெரிய பெயர்கள். அவர்களுடன் நிச்சயம் இது குறித்து ஆலோசிக்க வேண்டும். நாம் இப்போதே இளம் வீரர்களை ஆதரித்தால் அவர்கள் உலகக்கோப்பை வருவதற்குள் தயாராகி விடுவார்கள். அதே சமயம், விராட் கோலி, ரோஹித் சர்மா தங்கள் டி20 எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி அவர்களிடம் பிசிசிஐ பேச வேண்டும்." என கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

x