ஐபிஎல் போட்டி தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 7 வது லீக் ஆட்டம் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால் சென்னை அணி முதலில் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ருதுராஜ் மற்றும் ரச்சின் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினர். பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசிய ரச்சின் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த ரஹானே 12 ரன்கள் எடுத்தார். பின்னர் அதிரடி ஆட்டக்காரர் சிவம் துபே களமிறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ருதுராஜ் 46 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்சல் நிதானமாக ஆட, சிவம் துபே சிக்ஸர்களாக விளாசினார். 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவர் ஆட்டம் இழந்தார்.
அவரைத் தொடர்ந்து டேரில் மிட்சலும் 24 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, சமீர் ரிஸ்வி அடித்த இரண்டு சிக்ஸர்களால் சென்னை அணி 200 ரன்களைக் கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொஹித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது. அணியின் கேப்டன் கில் 8 ரன்களிலும், விஜய் சங்கர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சஹாவும் 21 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் இறங்கிய சாய் சுதர்சனும் அவருடன் சேர்ந்த மில்லரும் அதிரடியாக ஆடினர்.
ஆனால் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து மில்லர் அவுட் ஆனார். சுதர்சன் 37 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஒமர்சாய் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரஷித் 1, டெவாட்டியா 8, என வந்த வேகத்தில் வெளியேற, உமேஷ் 10, ஜான்சன் 5 என 20 ஓவர்களில் குஜராத் அணி 143 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி வீரர்கள் தீபக் சஹார், முஷ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் இந்தத் தொடரில் சென்னை இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது.