காவ்யா மாறன் ரியாக்‌ஷன் வைரல் @ சன்ரைசஸ் ஹைதராபாத் வென்ற தருணம்!


சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் வெள்ளிக்கிழமை நடந்த இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இந்த வெற்றியை அந்த அணி உரிமையாளர் காவ்யா மாறன் கொண்டாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது குவாலிபையர் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். ஷாபாஸ் அகமது (3) மற்றும் அபிஷேக் சர்மா (2) விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இருவரும் நான்கு ஓவர்கள் வீசி முறையே 23 மற்றும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தனர்.

20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது ராஜஸ்தான். இதன் மூலம் 36 ரன்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது. அந்த அணி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருப்பதால் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகம் அடைந்தார். ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததை கேலரியில் நின்று பார்த்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த காவ்யா, அதனைக் கொண்டாட அருகில் இருந்த தனது தந்தை கலாநிதி மாறனை கட்டிப்பிடித்து அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே, ஆட்ட நாயகன் விருது பெற்ற ஷாபாஸ் அகமது கூறுகையில், "சூழ்நிலையைப் பொறுத்து நாங்கள் உங்களைப் பயன்படுத்துவோம் என்று அணித் தலைவரும் பயிற்சியாளரும் என்னிடம் கூறியிருந்தனர். அணியில் எனது பங்கு லோயர் டவுன் ஆர்டரில் விளையாடுவதே. நாங்கள் சரிந்தால் நாங்கள் உங்களை இறக்குவோம் என்று அவர்கள் என்னிடம் தெரிவித்திருந்தனர்.

நான் பேட் செய்தபோது, அவேஷ் மற்றும் சந்தீப் பந்து வீசியது இந்த விக்கெட் மிகவும் முக்கியமானது என்று என்னை உணரச் செய்தது. இதுபோன்ற ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றது குறித்து நான் பெருமையடைகிறேன். அணியில் ஓர் அமைதி நிலவுகிறது. இறுதிப் போட்டியில் வென்றது நாங்கள் மொத்தமாக கொண்டாடுவோம். இரவு நன்றாக ஒய்வு எடுப்போம்" என்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.