சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ள ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கில் நாளை உத்தரவிட உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும் டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்தா சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும்.

இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, ஸ்ரீஹரிஷ் மற்றும் லூயிஸ்ராஜ் ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, போட்டி நடத்துவதற்கான தடையில்லா சான்று ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...