9ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு (2024) வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கு வரலாற்றில் முதன்முறையாக உகாண்டா அணி தகுதிபெற்றுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளன. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள 8 அணிகள் தகுதிச் சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 5 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்ற நமீபியா அணி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. தகுதிச் சுற்று அடிப்படையில் இதுவரை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா ஆகிய 7 அணிகள் தகுதிபெற்றிருந்தன.
இந்த நிலையில் மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இந்த நிலையில், 2024 டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு உகாண்டா அணி முதன்முறையாகத் தகுதிபெற்றுள்ளது. இதன்மூலம், இத்தொடரில் பங்கேற்கும் ஐந்தாவது ஆப்பிரிக்க நாடாகவும் உகாண்டா உள்ளது. 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிபெற்ற உகாண்டா, நமீபியாவுக்கு அடுத்து 2வது இடத்தைப் பிடித்ததுடன், உலகக்கோப்பைக்கும் தகுதிபெற்றது.
ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் நடைபெற்ற தகுதி சுற்றுப் போட்டியில் நமீபியா, உகாண்டா, ஜிம்பாப்வே, கென்யா, நைஜீரியா, தான்சினியா, ருவாண்டா ஆகிய 7 அணிகள் மோதின. இதில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த நமீபியாவும், உகாண்டாவும் உலகக்கோப்பைக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுற்றில் அனுபவம் வாய்ந்த ஜிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய அணிகள் தலா 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.
இன்னும் எஞ்சியிருக்கும் ஒரு போட்டியில் அவைகள் வெற்றிபெற்றாலும் புள்ளிப் பட்டியலுக்கு முன்னேற முடியாது. முன்னதாக, இன்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் உகாண்டா அணி ருவாண்டா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. முதன்முறையாக உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெற்றுள்ள உகாண்டா அணிக்கு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது.