ஐபிஎல் 2024 போட்டிகள் என்னாகும்? தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் பெங்களூருவின் அடுத்த சவால்


ஐபிஎல் 2024 நட்சத்திர வீரர்கள்

பெங்களூருவின் கடும் தண்ணீர் பற்றாக்குறை நெருக்கடிகளின் மத்தியில், அங்கே நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் ஐபிஎல் 2024 போட்டிகள் கேள்விக்குறியாகி உள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் காணாத தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது பெங்களூரு மாநகரம். இதனூடே அங்கே மார்ச் 25 அன்று தொடங்கி நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பெங்களூருவில் கோடைக்காலம் தொடங்கும் முன்னரே தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது அங்கே திண்டாடுகின்றனர். தண்ணீருக்கான ஆழ்த்துளை கிணறுகள் வறண்டுள்ளது. இதனால் மக்கள் லாரி குடிநீரை நம்பி இருக்கின்றனர்.

பெங்களூருவில் தண்ணீர் லாரியை நம்பியிருக்கும் பொதுமக்கள்

புறநகர் பகுதிகளில் வாரம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக மக்கள் குமுறுகின்றர். தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளது. மேலும், கோடையில் பெரும் தண்ணீர் பஞ்சம் அச்சுறுத்தும் என்பதால், வெளியூர்களில் இருந்து வந்து பெங்களூருவில் தங்கி வேலை செய்பவர்கள், சொந்த ஊருக்கு திரும்புமாறும் கட்டாயத்துக்கு ஆளாகின்றனர்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், நிறுவனங்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளன. கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் குடிநீரை பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பும் முன்னதாக வெளியானது. தொழிற்சாலைகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக உற்பத்தி பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், பொருளாதார ரீதியிலும் பின்னடைவு ஏற்படலாம் என வணிகர்கள் எச்சரிக்கின்றனர்.

பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம்

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் மார்ச் 25 அன்று தொடங்கி 3 நாட்களுக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற திட்டமிட்டிருக்கும் ஐபிஎல் போட்டிகள் கேள்விக்குறியாகி உள்ளன. ஆனால் பெங்களூருவில் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ஐபிஎல்17வது பதிப்பின் முதல் 21 நாட்களில், மூன்று போட்டிகள் எம்.சின்னசாமி மைதானத்தில் அரங்கேற இருக்கின்றன. மார்ச் 25, 29 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தினங்களில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்லமாட்டேன்... அலர்ட்டான ரஜினிகாந்த்!

பாஜக வேட்பாளராக களமிறங்கும் மைசூர் மகாராஜா!

x