சின்னாளபட்டியில் மாவட்ட அளவிலான ஹேன்ட் பால் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்பு


சின்னாளபட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ஹேன்ட்பால் போட்டியில் விளையாடிய கல்லூரி மாணவிகள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான ஹேன்ட்பால் போட்டிகள் நடைபெற்றது.

சின்னாளபட்டி சேரன் பள்ளி மைதானத்தில் நடந்த மாணவிகளுக்கான முதல் போட்டியை ஹேன்ட்பால் கழகத்தின் மாநில செயலாளர் எம்.சிவ குமார் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் திலகம், ஹேன்ட் பால் கழகத்தின் மாவட்ட தலைவர் சமயநாதன், மாவட்ட பொருளாளர் மகா தேவன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமார் வரவேற்றார். 25-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த ஹேன்ட்பால் அணிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.

முதல் போட்டியாக திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரி மற்றும் திண்டுக்கல் பான்செக்கர்ஸ் கல்லூரி மாணவிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது. இதில் பான்செக்கர்ஸ் கல்லூரி அணி 8க்கு 7 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., கல்லூரிக்கும், திண்டுக்கல் புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையே நடைபெற்ற ஹேன்ட் பால் போட்டியில், பி.எஸ்.என்.ஏ. கல்லூரி அணி 18க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

x