வெளியேறினார் ரோஹித் சர்மா... அணியை வழிநடத்துகிறார் பும்ரா!


கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா

முதுகில் ஏற்பட்டுள்ள தசைபிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், தொடர்ந்து 3 டெஸ்ட்களில் இந்தியாவும் வென்றுள்ளன. இதன் மூலம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா- இங்கிலாந்து இடையே கடைசி டெஸ்ட் போட்டி, தர்மசாலாவில் கடந்த 7-ம் தேதி முதல் நடந்து வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி

அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா, ஜெய்ஸ்வால் 57 ரன்கள், ரோகித் 103 ரன்கள், சுப்மன் கில் 110 ரன்கள், சர்பராஸ் கான் 56, படிக்கல் 65 ரன்கள் என முதலில் களமிறங்கிய 5 பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆடினர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் இறுதியில் 8 விகெட் இழப்பிற்கு 473 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. குல்தீப் யாதவ் 27 ரன்களும், பும்ரா 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்தை விட 255 ரன்களுடன் இந்தியா முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிமுதல் துவங்கியது. ஆட்டம் தொடங்கிய 3 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்த குல்தீப் யாதவ்வை ஜேம்ஸ் ஆண்டர்சன் விக்கெட்டாக்கினார். 20 ரன்கள் எடுத்திருந்த பும்ராவை பஷிர் அவுட் ஆக்க, இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 477 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இதன்மூலம் 259 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயிப் பஷிர் 5, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

இந்த மூன்றாவது நாள் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இது ஏன் என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் விளக்கி இருக்கும் பிசிசிஐ, ‘முதுகில் ஏற்பட்டுள்ள தசைபிடிப்பு காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார். அவருக்கு பதிலாக பும்ரா, அணியை வழிநடத்துவார்’ என்று தெரிவித்துள்ளது.

x