மீண்டும் மைக் டைசன்... 20 ஆண்டு இடைவெளியில் நெட்ஃபிளிக்ஸ் குத்துச்சண்டைக்காக களத்தில் குதிக்கிறார்


மைக் டைசன் - ஜேக் பால்

குத்துச்சண்டையில் ஹெவிவெயிட் சாம்பியனாக திகழ்ந்த மைக் டைசன், சுமார் 20 ஆண்டுகள் இடைவெளியில் மாபெரும் போட்டி ஒன்றுக்காக மீண்டும் களம் காண்கிறார்.

57 வயதாகும் முன்னாள் ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன், 2005-ம் ஆண்டுக்குப் பின்னர் தொழில்முறை போட்டி ஒன்றில் மீண்டும் களம் காண இருக்கிறார். முன்னாள் யூட்யூபரும் தற்போதைய குத்துச்சண்டை வீரருமான ஜேக் பால் என்பவருடன் டைசன் மோத இருக்கிறார். டைசனை விட, ஜேக் பால் சுமார் 30 வருடங்கள் இளையவராவார்.

மைக் டைசன் - ஜேக் பால்

நியூயார்க்கில் பிறந்த மைக் டைசன், 1987 முதல் 1990 வரை தனது கேரியரில் உச்சம் தொட்டிருந்தார். அவரது நாக் அவுட் சாதனைகள் உலகமெங்கும் இளைஞர்களை குத்துச்சண்டைக்கு இழுத்தன. 2005-ம் ஆண்டில் பங்கேற்ற கடைசி தொழில்முறை போட்டிக்குப் பின்னர், 2020-ம் ஆண்டின் கண்காட்சி போட்டி ஒன்றுக்காக மைக் டைசன் ஜாலியாக மோதினார். அதன் பின்னர் எதிர்வரும் ஜூலை 20 அன்று ஜேக் பால் உடன் மோத இருக்கிறார்.

இந்தப் போட்டி நெட்ஃபிளிக்ஸில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. புகழ்பெற்ற ஏடி&டி மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில், ஜேக் பாலை மைக் டைசன் எதிர்கொள்கிறார். 2020-ம் ஆண்டு கண்காட்சி மோதலுக்கான போட்டியின்போது வெளியான வீடியோக்கள் மைக் டைசன் இன்னமும் திடகாத்திரமாக இருப்பதைக் காட்டின.

ஜேக் பால் -மைக் டைசன்

நெட்ஃபிளிக்ஸ்க்கான மோதல் என்பதாலும், எதிர் தரப்பில் களமிறங்கும் ஜேக் பால் காரணமாகவும், இந்த மோதல் நிஜமான குத்துச்சண்டையாக இருக்குமா என்ற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. எனினும் ஜேக் பாலின் ஆக்ரோஷமும், டைசனின் அனுபவமுமாக ஜூலை 20 மோதல் அனல்பரத்தக் காத்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

x