ராகுல் டிராவிட் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்றும், அவருக்கு பதிலாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான விவிஎஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளருக்கான ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைந்துவிட்டதாக கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் உறுதி செய்கின்றன. மேலும் தலைமை பயிற்சியாளராக தொடர வேண்டாம் என ராகுல் டிராவிட் முடிவு செய்துள்ளதாகவும், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ராகுல் டிராவிட்டின் டீம் மேட்டுமான விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலேயே விவிஎஸ் லட்சுமணன் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறிய பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல்களில் இந்திய அணியானது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றின் இறுதிப் போட்டி வரை முன்னறியது. ஆனால் இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்தது. இதேபோல் கடந்த ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.