இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியும், மேத்தீவ் வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோத உள்ளன.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடர் முடிவடைந்து 4 நாட்களுக்குள்ளாக டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கில், ராகுல், ஷமி, பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத முழுவதும் இளம் வீரர்களால் ஆன இந்திய அணி களமிறங்குகிறது.
அதேபோல், ஆஸ்திரேலிய அணியிலும் ஹெட், மேக்ஸ்வெல் உள்ளிட்ட வீரர்களை தவிர்த்து புதிய அணி களமிறங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி, விசாகபட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றி, உலகக் கோப்பை தோல்விக்கு பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.