இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடர் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட்டில் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டு பிரிவிலும் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார். டெல்லி அணியில் ஐபிஎல் போட்டியை தொடங்கிய அவர், அடுத்து மும்பை, பஞ்சாப், குஜராத், கொல்கத்தா அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கொல்கத்தா அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். 2013ம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடியபோது, அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 240 போட்டிகளில் 4516 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல்லில் அவரது சராசரி 25.81 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 132.71 ஆகவும் உள்ளது. விக்கெட் கீப்பராக 133 டிஸ்மிசல்களையும், 36 ஸ்டம்பிங்களைும் தினேஷ் கார்த்திக் செய்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக ஆடிய அவர், நல்ல பினிஷராகவும் இருந்தார். ஆனால் 2023ம் ஆண்டில் வெறும் 140 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்ஆப் பார்மில் இருந்தார். கடந்த தொடரில் சரியாக விளையாடவில்லை.
இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடி 4,900 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவர் சரியான பார்மில் இல்லாததால், இந்திய அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடவில்லை.

கடந்த 2023ம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணிக்காக ஆடியிருந்தார். அதற்குபிறகு அவர் எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடி இருந்தார். அதன் பிறகு எந்த தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், இந்தாண்டு மார்ச் 22ம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். 39 வயதாகும் தினேஷ் கார்த்திக், கிரிக்கெட்டில் இறங்குமுகமாக இருப்பதால், ஐபிஎல் மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்று தெரிகிறது.