2026ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் ஆசியாவை சேர்ந்த 36 அணிகள் 9 பிரிவுகளாக பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த போட்டிகள் இந்தியா, கத்தார், ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆசிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா - கத்தார் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்றது. உலக தரவரிசையில் 102வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் சுமாரான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.
தொடக்கம் முதலே கத்தார் அணியின் கையில் போட்டி இருந்தது. இந்திய அணி திட்டமிட்டபடி வலுவானத் தொடக்கம் அமையவில்லை. தொடர்ந்து ஆட்டம் சென்றுகொண்டிருக்கையில், முஸ்தபா தரேக் மஷால் 4 வது நிமிடத்தில் கத்தார் அணிக்காக ஒரு கோல் அடித்தார். கோலைத் தடுக்க இந்திய அணி முயற்சி செய்தும் அது முடியவில்லை. அதன்பிறகு அல்மோஸ் அலி 47வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 0-2 என்ற கணக்கில் இருந்தது. போட்டி முடியும் கட்டத்தில் 86வது நிமிடத்தில் யூசுப் அப்துரிசாக் கோல் அடித்த நிலையில் போட்டி 0 – 3 என்ற கணக்கில் முடிந்தது.
இதனால் உலகக் கோப்பை கால்பந்து இரண்டாவது தகுதிச் சுற்றில் கத்தார் வெற்றி பெற்றது. இந்தியா தோல்வியைத் தழுவியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கத்தார் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா தோல்வியுற்றதால் 2வது இடத்திலிருந்து 3 வது இடத்திற்கு சென்றது. முன்னதாக குவைத் அணியுடன் மோதி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று 17 மாவட்டங்களில் கனமழை.. ஆரஞ்சு அலர்ட்... பத்திரமா இருங்க!