இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோவ் ஆகியோர் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள நிலையில், 5வது மற்றும் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் இன்று துவங்கி நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2வது முறையாக விநோத சாதனை ஒன்று படைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று உள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 507 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதேபோல் 3,309 ரன்களையும் குவித்துள்ளார். இந்தியாவில் 500 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய 2வது வீரர் அஸ்வின்.

இதேபோல் இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோவ் தனது 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறார். கடந்த 2012ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவர் களமிறங்கி இருந்தார். இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜானி, 5,974 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 12 சதங்கள் மற்றும் 26 அரை சதங்கள் அடங்கும். விக்கெட் கீப்பராக 242 கேட்சுகள் மற்றும் 14 ஸ்டம்பிங்களை அவர் செய்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களது 100வது போட்டியில் களம் காண்பது 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இது 2வது முறையாகும். இதற்கு முன்பாக 2013ம் ஆண்டு இங்கிலாந்தின் அலைஸ்டர் குக், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் ஆகியோர் ஆஷஸ் தொடரில் தங்களது 100வது போட்டியில் களமிறங்கி இருந்தனர்.
கடந்த 2000வது ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் மற்றும் அலெக் ஸ்டூவர்ட் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக முதல் முறையாக தங்களது 100வது போட்டியில் ஒன்றாக களமிறங்கி இருந்தனர். இதன் பின்னர் 2006ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணியில் ஜாக்கெஸ் காலிஸ், ஷான் பொல்லாக் மற்றும் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தங்களது 100வது போட்டியில் ஒன்றாக களமிறங்கியிருந்தனர்.
அஸ்வின் மற்றும் பெயர்ஸ்டோவின் சாதனைகளை தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் டிம் சவுதி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் போது இதே சாதனையை படைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!
பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!
ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!