பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் திருவிழா ஜூலை 26-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு நடைபெறவுள்ள ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
பாரீசில் வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை ஒலிம்பிக் திருவிழா நடைபெறுகிறது. இப்போட்டியில் நடைபெறவுள்ள ஹாக்கி போட்டியின் அட்டவணையை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயாப் இக்ராம் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
இந்த அட்டவணைப்படி ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், அர்ஜென்டினா, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இதேபோல் பெண்களுக்கான 'ஏ' பிரிவில் நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், சீனா, பிரான்ஸ் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் அணி தகுதி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.