மகளிர் கிரிக்கெட் போட்டியில் திருநங்கைகள் பங்கேற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தடை விதித்துள்ளது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் சரி, பாலினம் மாறியிருந்தாலும் சரி, அது பொருட்டல்ல. திருநங்கைகள் சர்வதேச மகளிர் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் விளையாட்டு போட்டியின் கண்ணியத்தை பாதுகாக்கவும், வீராங்கனைகளின் பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. கிரிக்கெட் பங்குதாரர்களின் 9 மாத நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது.
இந்த அதிரடி முடிவு குறித்து ஐசிசியின் வட்டாரத்தில் கூறுகையில், ''2028 ஒலிம்பிக் போட்டியின்போது கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளதை முன்னிட்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்படும் பட்சத்தில் ஒலிம்பிக் விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். பாலின விவகாரமானது உலக அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது ஒலிம்பிக்கிற்கு ஏற்றவாறு விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. மேலும் அந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. எனவே, அதற்கேற்பதான் திருநங்கைகளுக்கு தடைவிதிக்கும் முடிவை ஐசிசி எடுத்துள்ளது'' என தெரிவித்துள்ளனர்.
ஐசிசியின் இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, இந்த ஆண்டில் முதல் திருநங்கை வீராங்கனையாக களமிறங்கி சாதனை படைத்த கனடாவின் டேனியல் மெக்கே தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐசிசியின் திருநங்கை தடை அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.