தல வந்தாச்சு... ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்தார் தோனி!


சென்னை விமான நிலையத்தில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி

ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ம் தேதி துவங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. 10 அணிகள் மோதும் இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கெனவே வெளியாகி இருந்தது. அதன்படி ஏப்ரல் 7ம் தேதி வரையிலான முதல் அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டாம் கட்ட அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் கோப்பை

இதையடுத்து அனைத்து அணிகளின் வீரர்களும், அவர்கள் சார்ந்திருக்கும் மாநிலங்களின் மைதானங்களுக்கு திரும்பி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அணியின் கேப்டனான தோனி இதில் பங்கேற்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் மகனின் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் சென்றிருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி

இதையடுத்து நிகழ்வுகளை முடித்துக் கொண்டு தற்போது அவர் சென்னை திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நாளை அல்லது நாளை மறுநாள் முதல் அவர் சிஎஸ்கே அணி வீரர்களுடன் பயிற்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

பேச்சுவார்த்தையில் சுபம்... அதிமுக - தேமுதிக நாளை ஒப்பந்தம் கையெழுத்து!

x