[X] Close

ஆசிய கோப்பை இறுதியில் வங்கதேசம்: பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வி


bangladesh-beats-pakistan

சதமடித்த ரஹிம் - ஆசிஃப் அலி ஆட்டமிழந்த ஏமாற்றத்தில் இமாம் உல் ஹக் | படங்கள்: ஏபி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 27 Sep, 2018 12:09 pm
  • அ+ அ-

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் வங்கதேச அணி மோதவுள்ளது. புதன் கிழமை நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆசிய கோப்பையில் அரையிறுதியாகவே பார்க்கப்பட்ட சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டம் அபுதாபியில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை மட்டுமே வங்கதேசம் எடுத்தது.

முஷ்ஃபிகர் ரஹும், முஹம்மத் மிதுன் ஜோடி வங்கதேச அணியை பெரும் சரிவிலிருந்து காப்பாற்றியது. இருவரும் சேர்ந்து 144 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். ஆரம்பத்தில் ரன் சேர்ப்பில் நிதானம் காட்டினாலும், போகப் போக ரன்கள் லாவகமாக வர ஆரம்பித்தன.

ரஹிம் 59 பந்துகளில் அரை சதம் கடந்தார், மிதுன் 66 பந்துகளில் அரை சதம் எட்டினார். வங்கதேசம் கவுரமான ஒரு ஸ்கோரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 34-வது ஓவரில் மிதுன் பந்துவீசிய ஹசன் அலியிடமே கேட்ச் கொடுத்து 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கயீஸ் 9 ரன்களுக்கு வெளியேறினார். ரஹிம் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 99 ரன்கள் எடுத்திருந்த போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, வங்கதேச அணி 50 ஓவர்களுக்கு முன்பாகவே 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ரன்கள் எடுத்திருந்தது.

240 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியும், வங்கதேசத்துக்குப் போட்டியாக 5 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் சேர்த்திருந்தது. 

இமாம் உல் ஹக், ஷோஹைப் மாலிக் இணை கண்டிப்பாக பாகிஸ்தானை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருவரும் நிதானமாக ஆடினாலும் நம்பிக்கையளிக்கும் விதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். தேவைப்படும் சராசரியும் 5 ரன்களுக்குக் குறைவாகவே இருந்ததால் ஆட்டத்தில் பெரிய பதட்டம் இல்லாமல் போனது. இருவரும் இணைந்து 67 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர்.

வங்கதேசத்தின் சிறப்பான பந்துவீச்சும், பீல்டிங்கும், பாகிஸ்தானின் ரன்சேர்ப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தியது. முக்கியமாக 21-வது ஓவரில், சிறப்பாக ஆடி வந்த ஷோஹைப் மாலிக்கின் கேட்ச்சை மொர்டாஸா அட்டகாசமாகத் தாவிப் பிடித்தார். மாலிக்கே எதிர்பாராத கேட்ச் இது. ஏமாற்றத்துடன் அவர் பெவிலியன் திரும்ப ஷதாப் கான் களமிறங்கினார்.

பாகிஸ்தான் தோல்விக்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஷதாப் கானின் பொறுப்பற்ற ஆட்டம் அதில் முதல் காரணமாக சொல்லப்பட வேண்டும். டெஸ்ட் மேட்ச் பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சோதித்தார் ஷதாப். மொத்தம் 24 பந்துகள் ஆடி 4 ரன்கள் மட்டுமே சேர்த்து ஷதாப் ஆட்டமிழந்த போது தேவைப்படும் சராசரி 5.5 ரன்களைத் தாண்டியிருந்தது. 

அடுத்து ஆசிஃப் அலி இமாம் ஜோடி 71 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தாலும், ரன்கள் அவ்வளவு வேகமாகச் சேரவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகமாகி, ஒரு ஓவருக்கு 6 ரன்களுக்கும் அதிகமாகத் தேவை என்ற நிலை மாறியது. 40-வது ஓவரில் ஆசிஃப் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் இமாம் 83 ரன்களுக்கு வெளியேறினார். தேவை 54 பந்துகளில் 73 ரன்கள்.

வங்கதேசத்தின் கட்டுப்பாடான பந்துவீச்சுத் தொடர, கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 38 ரன்கள் தேவை என்ற வெற்றிக்கு சாத்தியமில்லாத நிலை உருவானது. முடிவில் பாகிஸ்தான் 202 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற கணக்கில் இன்னிங்க்ஸை முடித்தது.

ஆட்டநாயகனாக முஷ்ஃபிகர் ரஹும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close