உலகக்கோப்பையில் அதிக ரன் குவித்த கேப்டன்: ரோகித் சர்மா சாதனை!


கேப்டன் ரோகித் சர்மா

ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார் ரோகித் சர்மா.

2023-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 45 நாட்களாக நடைபெற்ற இந்தத்திருவிழா இன்று அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளார்களை கதிகலங்க வைத்தார். அவர் 31 பந்துகளில் 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஒட்டு மொத்தமாக 597 ரன்னை கடந்தார். இதுவே ஒரு அணியின் கேப்டன் எடுத்த அதிகபட்ச ரன்னாக உள்ளது. இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கேன் வில்லியம் சன் 578 ரன் எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை ரோகித் சர்மா தற்போது முறியடித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் தொடர்ந்து 5 போட்டிகளில் அரை சதத்தை தவறவிட்டுள்ளார். அதாவது 3 லீக் ஆட்டங்களில் 40, 46, 48 ரன்னும், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் 47, 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

x