ஃப்ரீ பாஸில் பணக்காரர்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் பார்ப்பதா?: பிரபல தொழிலதிபரின் கருத்தால் சர்ச்சை!


ஹர்ஷ் கோயங்கா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு, தனது பணக்கார நண்பர்கள் யாரும் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கவில்லை என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா விமர்சித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இன்று நடைபெற உள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியைக் காண ஒட்டுமொத்த உலகமே காத்துக்கொண்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பொதுவெளிகளில் இந்த போட்டியை ஒளிபரப்பவும் பலர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த போட்டியை ஏராளமான பிரபலங்கள் நேரில் காண உள்ளனர். குறிப்பாக பிரதமர் மோடி, ஆஸ்திரேலியா துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் தாக்கூர், 8 மாநில முதலமைச்சர்கள், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதே போன்று சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களும் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியைக் காண உள்ளனர். இந்நிலையில், தனது நண்பர்களாக இருக்கும் தொழிலதிபர்கள், பணம் கொடுத்து டிக்கெட் வாங்காமல், இலவச பாஸ் மூலம் போட்டியைக் காண இருப்பதாக ஹர்ஷ் கோயங்கா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பணக்காரர்கள், கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்காதது முரணாக உள்ளது என்றும் விமர்சித்துள்ளார். இவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, மீண்டும் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், தனது பதிவிற்கு பல்வேறு பதில்கள் வந்துள்ளன. கிரிக்கெட் போட்டி எப்படிப்பட்டவர்களை எல்லாம் ஒருங்கிணைகிறது என்று தெரிவித்துள்ளார்.

x