உலகக் கோப்பை பைனலிலும் தொடருமா ஹிட் மேனின் அதிரடி?: ரசிகர்கள் ஆவல்!


ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என ரோகித் சர்மாவை அழைக்கின்றனர். அதற்கு காரணம் அவர் தனது பேட்டிங்கில் காட்டும் அதிரடி என்றால் மிகையில்லை. இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் தனது ஹிட் மேன் என்ற பெயரை நிரூபிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ரோகித்தின் ஆட்டத்திறனை பார்த்த ரசிகர்கள் என்னதான் ஆச்சு ரோகித்துக்கு என புலம்ப ஆரம்பித்திருந்தனர். ஆனால், அவர் தனது பலத்தை ஆசியக் கோப்பை தொடரிலேயே காட்டத் தொடங்கினார். அந்த தொடரில் பார்முக்கு வந்த அவர், 6 போட்டிகளில் 3 அரை சதங்களை விளாசி, உலகக் கோப்பைக்குத் தான் தயார் என அறிவித்தார்.

எனினும், உலகக் கோப்பைத் தொடரில், சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதலாவது லீக் போட்டியில் டக் அவுட் ஆகி, ரசிகர்களை ஏமாற்றினார்.

ரோகித் சர்மா

ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய அவர், பாகிஸ்தானுக்கு எதிராகவும் 86 ரன்களைச் அடித்து, கம் பேக் கொடுத்ததுடன் தான் ஹிட்மேன்தான் எனவும் நிரூபித்தார். அதற்கு அடுத்து வந்த ஆட்டங்கள் அனைத்திலும் தனது ருத்ர தாண்டவத்தை காட்டிய கேப்டன் ரோகித் சர்மா, எதிரணி பந்து வீச்சாளர்களை தொடக்கத்திலேயே சிதறடித்தார்.

இது அவருக்குப் பின் விளையாட வந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் எளிதாக எதிரணி பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் வாய்ப்பை வழங்கியது. இதனால், இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

ஹிட்மேன் என்ற தனது பெயரை மெய்ப்பிக்கும் வகையில், இரு புதிய சாதனைகளையும் அவர் இந்த உலகக் கோப்பையில் நிகழ்த்தியுள்ளார். ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர், ஒட்டுமொத்த உலகக் கோப்பையிலும் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற புதிய வரலாறை ரோகித் எழுதியுள்ளார். இந்த இரு சாதனைகளையும் முன்னதாக மேற்கு இந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் தன் வசம் வைத்திருந்தார்.

x