ரஞ்சி கோப்பை அரையிறுதியில் சொதப்பல்... 146 ரன்களில் சுருண்ட தமிழ்நாடு; தெறிக்கவிட்ட மும்பை அணி!


தமிழ்நாடு அணி

ரஞ்சி கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், மும்பை அணியும் இன்று மோதின. முதல் இன்னிங்சில் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 146 ரன்களுக்குள் தமிழ்நாடு அணி சுருண்டது.

ரஞ்சி கோப்பை

இந்தியாவில் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எலைட் குரூப் சி-யில் இருந்த தமிழ்நாடு அணி, 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று முதல் வரும் 6 ம் தேதி வரையில் நடக்கின்றன.

இதில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் மும்பையும், தமிழ்நாடும் மோதிக் கொண்டன. மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

போட்டியின் ஆரம்பித்திலேயே பெரும் அதிர்ச்சி, ரசிகர்களுக்கு காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்சன், ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வருபவர்களாவது நின்று ஆடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரதோஷ் பால் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நெருக்கடியான நிலையில் களத்தில் இறங்கிய கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து பாபா இந்திரஜித் 11 ரன்னில் அவுட்டானார். இதனால், 42 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தமிழ்நாடு அணி பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டது.

மும்பை அணி

6வது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து, நிதானமாக ஆடி ரன்களை உயர்த்தினர். ஆனால், அந்த ஜோடியின் ஆட்டம் கூட வெகுநேரம் நீடிக்கவில்லை. 44 ரன்களில் விஜய் சங்கரும், 43 ரன்களில் வாஷிங்டன் சுந்தரும் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்குள் தமிழ்நாடு அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தானுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த பார்மில் இருந்தால், இறுதிப்போட்டிக்கு தமிழ்நாடு அணி செல்வதும், கோப்பையை வெல்வதும் கேள்விக்குறிதான் என்று ரசிகர்கள், சமூகவலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

x