நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய, இத்தொடர் நாளை இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. இறுதிப் போட்டி நாளை பிற்பகல், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் நரேந்திர மோடி மைதானத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் பார்வையாளர்கள் போட்டிகளை கண்டுகளிக்க முடியும். நாளைய போட்டியை காண இந்தியவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் அகமதாபாத் நகருக்கு வருகை தந்துள்ளனர். இதனால், அந்நகரமே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஹோட்டல்களில் எப்போதும் பின்பற்றும் கட்டணங்களை தாண்டி, 5 மடங்கு அதிகமாக வாடகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வழக்கமாக 5 நட்சத்திர ஹோட்டல்களில், இரண்டு இரவுகள் தங்க ரூ.50,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தற்போது ரூ.2 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. சாதாரண தங்கும் விடுதிகளில் பொதுவாக ரூ.4,000 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.20,000 வரை வசூல் செய்யபடுகிறது. அதே போல விமானப் போக்குவரத்து கட்டணங்களை பொறுத்தவரை, குறிப்பாக சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானங்கள் கட்டணம் அதிகரித்துள்ளது.
சாதாரண நாட்களில் விமான கட்டணங்கள் ரூ.12,000 முதல் 16,000 வரை இருக்கும். ஆனால், தற்போது ரூ.28,000 வரை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு இடையே பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!