புதிய தேர்வு குழு தலைவரானார் வஹாப் ரியாஸ்… பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் அறிவிப்பு!


வஹாப் ரியாஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்து, லீக் சுற்றிலேயே வெளியேறியது. இதனால், அந்த அணி வீரர்கள் மீதும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணமான பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பலர் கூறினர். இதற்கிடையில், அந்த அணியின் தேர்வுக் குழுத் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து பாபர் அசாம் விலகுவதாக அறிவித்தார். அந்த அணியின் டி20 போட்டி கேப்டனாக ஷாகின் அப்ரிடியும், டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக ஷான் மசூத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக் குழுத் தலைவராக அந்த அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸை நியமித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கும், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்குமான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்வது அவருக்கு முதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் மற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களை வஹாப் ரியாஸுடனான ஆலோசனைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x