உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக பந்து வீசுவதற்கான காரணம் குறித்து முகமது ஷமி மனம் திறந்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங்கில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்கின்றனர். பந்து வீச்சில் முகமது ஷமி, குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகின்றனர்.
அதிலும், முகமது ஷமி அசால்டாக பந்து வீசி தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அவர் இதுவரை விளையாடியுள்ள 6 போட்டிகளில், 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய நம்பர் ஒன் வீரராக உள்ளார். விக்கெட்டுகள் எடுப்பது மட்டுமின்றி குறைந்த ரன் கொடுத்த வீரராகவும் உள்ளார். உலகக் கோப்பை தொடரில் அவரது பந்துவீச்சு எகானமி 5.01 ஆகும்.
இந்நிலையில், பல பந்துவீச்சாளர்கள் திணறும் போது ஷமி மட்டும் எப்படி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தனது வெற்றிக்கான மந்திரம் என்ன என்பது குறித்து ஷமி மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ``எப்போதும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பந்துவீசுவேன். விக்கெட் எப்படி இருக்கிறது. பந்து ஸ்விங் ஆகிறதா, இல்லையா என்பதை கவனித்து பந்துவீசுவேன். பந்தில் ஸ்விங் இல்லையென்றால், நான் ஸ்டம்பை குறிவைத்து பந்துவீசுவேன். ஸ்டம்பை குறிவைத்து வீசும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் விளையாட முற்படும்போது விக்கெட் கிடைக்கும்'' என்றார்.