ட்ரெண்டிங்கில் கோலி… புகழாரம் சூட்டிய வில்லியம்சன்!


விராட் கோலி

நவீன கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக விராட் கோலி விளங்குகிறார். அதற்கு அவர் படைத்து வரும் சாதனைகளே சாட்சி. சர்வதேச கிரிக்கெட்டில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்கள், 80 சதங்கள், 137 அரை சதங்கள் என வேறு யாரும் தொட முடியாத உயரங்களைத் தொட்டுள்ளார். கோலியின் பலம் என்பது ஒரு நாள் போட்டிகள் தான். அதில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்கள் குவிப்பு, சேசிங்கின் போது மட்டுமே 92 ஆட்டங்களில் அதிவேகமாக 5,490-க்கும் அதிகமான ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

விராட் கோலி

இந்நிலையில், அதே ஒருநாள் போட்டியில் மற்றுமொரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை கடந்துள்ளார். கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களை கடந்திருந்தார். அதனை நேற்ற நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் முறியடித்த கோலி, தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, அவர் சச்சின் முன் தலை வணங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒரு இந்தியர், மும்பையில், உலகக் கோப்பை தொடரில் தனது சாதனையை முறியடித்ததில் பெரும் மகிழ்ச்சியடைவதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

இந்நிலையில், நேற்றைய போட்டியின் முடிவில் பேசிய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், கோலியின் ஆட்டத்திறன் நாளுக்கு, நாள் மேம்பட்டு வருவதாகவும், அதனால், எதிரணியினர் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் புகழாரம் சூட்டினார். “இன்றைய காலகட்டத்தில் ஒரு வீரர் 50 போட்டிகளை கடந்தாலே அவர் சிறந்த வீரராக அறியப்படுகிறார். ஆனால், 50 சதங்களை கடப்பது அசாத்தியம். கோலியின் சாதனைகள் அவருக்கானது அல்ல அணியின் வெற்றிக்கானது. தற்போதைய சூழலில் அவரே சிறந்த பேட்ஸ்மேன்” என்று சொல்லி இருக்கிறார் வில்லியம்சன்.

இந்தியா மட்டுமல்லாது உலகமே கோலியின் சாதனையை புகழ்ந்து பாராட்டி வருகிறது. அதன் எதிரொலியாக இணையம் எங்கும் விராட் கோலியே டிரெண்டிங்கில் உள்ளார். உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துடன் மோதி 70 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காத அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளது.

x