டி20 போட்டிகளில் வெறும் 33 பந்துகளில் சதம் விளாசி நமீபியா கிரிக்கெட் வீரர், ஜான் நிக்கோல் ஈட்டன் அசாத்திய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நேபாள் நாட்டில் நேபாள், நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகள் பங்கேற்கும் ட்ரை நேஷன் தொடர் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நமீபியா, நேபாளம் அணியை எதிர்கொண்டது. திருபுவன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நமீபியா அணியின் துவக்க ஆட்டக்காரர் மைக்கேல் வேன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பியர் காட்ஜே 11 ரன்களிலும், ஜான் பிரிலிங் 5 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் 11 ஓவர் முடிவில் அந்த அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஒரு முனையில் மலம் குருகர் மட்டும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அப்போது அவருடன் நமீபியா அணியின் நட்சத்திர வீரர் ஜான் நிக்கோல் ஈட்டன் களமிறங்கினார். களமிறங்கியது முதலே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஈட்டன், அடுத்தடுத்து நேபாள் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார். வெறும் 33 பந்துகளில் அவர் சதம் அடித்து அசத்தினார்.
36 பந்துகளை எதிர்கொண்ட ஈட்டன், 11 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதற்கு முன்பாக நேபாள் நாட்டின் குஷால் மல்லா மங்கோலியாவிற்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்து வந்தது. இந்த பட்டியலில் 3வது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லரும், 4வது இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மாவும், 5வது இடத்தில் செக் குடியரசைச் சேர்ந்த சுதீஷ் விக்ரமசேகராவும் 35 பந்துகளில் சதம் அடித்த வீரர்களாக இருந்து வருகின்றனர். இதனிடையே குருகர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஓவர் முடிவில் நமீபியா அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 206 ரன்கள் எடுத்திருந்தது. நேபாள் தரப்பில் ரோகித் பவுடேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதை எடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நேபாள் அணி களம் இறங்கியது. அந்த அணியில் கேப்டன் ரோகித் பவுடேல் சிறப்பாக விளையாடி 48 ரன்கள் குவித்தார். அதேபோல் தீபேந்திரா சிங் ஐரி 48 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியதால் அந்த அணி 18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றி பெற்றது.
நமீபியா தரப்பில் ரூபென் டிராம்ப்புள்மேன் அசத்தலாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் சாதனை படைத்த ஈட்டன், பந்து வீச்சிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதேபோல் பெர்னாட் மற்றும் ஜான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இறுதியில் ஆட்டநாயகனாக ஈட்டன் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் பாலிவுட் இயக்குநர்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்... ‘எதிர்நீச்சல்’ நடிகை மதுமிதா கைது?!