4வது டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி... இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் வென்று அசத்தல்!


இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுப்மன் கில்

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 23ம் தேதி ராஞ்சியில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

4வது டெஸ்டில் இந்திய அணி வீரர்கள்

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களில் ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணி 307 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வந்தது. இன்று 4வது நாள் ஆட்டம் துவங்கிய நிலையில் இந்திய வீரர் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 124 பந்துகளை சந்தித்த அவர், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி

அவருடன் இணைந்து துருவ் ஜுரல் 39 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, வெற்றி இலக்கான 192 ரன்களை இந்திய அணி எடுத்து, இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலமாக 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வசமாக்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...
இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

x