நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணியில் அஸ்வினிக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இதனால், நாளைய போட்டி இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 9 லீக் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், வீரர்கள் மன திடத்துடன் நாளைய போட்டியை எதிர்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாளை விளையாட உள்ள இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கடந்த 8ம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் மட்டுமே விளையாடினார்.
நியூசிலாந்தில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகம் இருப்பதாலும், வான்கடே மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சூர்ய குமார்யாதவிற்கு மாற்றாக அஸ்வின் உள்ளே வருவார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறிய நிலையில், முகமது ஷமிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் இதுவரை சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், கடந்த லீக் ஆட்டங்களில் இந்தியா 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.
நாளைய போட்டியில் இந்தியா 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசை நீண்டது என்பதால், கூடுதல் பந்து வீச்சாளர் இருந்தால் அது அணிக்கு பலமாக இருக்கும் என திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஸ்வின் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார் என்பதால், இந்த சாய்ஸை அணி நிர்வாகம் எடுக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!