கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய முன்னாள் வீரர்களை கெளரவிக்கும் விதமாக ஐசிசி ’ஹால் ஆஃப் பேம்’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், காலம் கடந்தும் கிரிக்கெட் விளையாட்டில் சாதனைகளால் புகழப்படும் வீரர்களின் பெயர்கள் இடம்பெறும். இந்நிலையில், இந்த ஆண்டு ’ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர், வீராங்கனை பெயர்களை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதில் இந்திய அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டிசில்வா மற்றும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை டயானா எடுல்ஜி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டிகள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடியவர் விரேந்திர சேவாக். 23 டெஸ்ட் சதங்களை அடித்துள்ள அவர், டெஸ்டில் அதிகபட்சமாக 319 ரன் எடுத்துள்ளார். இதுவே இந்திய வீரர் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள அதிகபட்ச ரன்னாக கருதப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களை கடந்துள்ள அவர், அதிகபட்சமாக 219 ரன் எடுத்துள்ளார். அதோடு, 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய வீரராகவும் திகழ்ந்தார். இந்நிலையில், அவர் ’ஐசிசி ஹால் ஆஃப் பேம்’ என்ற பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள விரேந்திர சேவாக், தன்னை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தனது வாழ்நாளில் பிடித்த விளையாட்டை விளையாட முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார். இந்நேரத்தில் தனது குடும்பத்தினர், நண்பர்கள், என்னுடன் விளையாடிய வீரர்கள் மற்றும் எப்போதும் தனக்காக பிரார்த்திக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பெரும் சாதனை படைத்த டயானா எடுல்ஜி ’ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இணைந்துள்ளார். அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 20 டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இந்திய மகளிர் கிரிக்கெட்டில் நிகழ்த்திய தாக்கம் அதிகம். அவரை கெளரவிக்கும் விதமாக ஐசிசி இந்த ’ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இணைத்துள்ளது.
இலங்கை முன்னாள் வீரர் அரவிந்த டிசில்வா இந்த ஆண்டு ’ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இலங்கை அணிக்காக 18 ஆண்டுகளில் 93 டெஸ்ட், 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றதோடு, இறுதி போட்டியில் 107 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து கோப்பையை வெல்ல காரணமாகவும் இருந்தார். இந்நிலையில், தனது பெயர் ’ஹால் ஆஃப் பேம்’ பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது குடுபம்பத்தின் உறுதுணையே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.