இன்று துவங்குகிறது மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்... முதல் போட்டியில் மும்பை - டெல்லி பலப்பரீட்சை!


மகளிர் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளின் தலைவர்கள் கோப்பையுடன்

பெங்களூருவில் இன்று துவங்கும் மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகளவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்ததையடுத்து, கடந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக டபிள்யூ.பி.எல் எனப்படும் மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய 5 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளன.

முதல் போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது

கடந்தாண்டு நடைபெற்ற முதல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதையடுத்து 2வது ஆண்டாக டபிள்யூ.பி.எல் போட்டிகள் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், லீக் சுற்றுகள் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் பிற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 2வது மற்றும் 3வது இடம் பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றை எட்டும்.

பெங்களுரூ சின்னசாமி மைதானம்

இந்த போட்டியில் கோப்பை வெல்லும் அணிக்கு 6 கோடி ரூபாயும், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு 3 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்படும். இன்று இரவு 8 மணிக்கு துவங்கும் முதல் லீக் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்தாண்டு 2வது இடம் பெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. ஹார்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி கடந்த சீசனில் 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி 2 தோல்வியை சந்தித்தது.

மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடந்த ஆண்டு 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளை சந்தித்தது. இவ்விரு அணிகளும் கடந்த தொடரில் 3 முறை நேரில் மோதியதில் மும்பை 2 வெற்றிகளையும் டெல்லி அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

x