[X] Close

இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டும் ஏன் இந்த சலுகை? - பாகிஸ்தான் கேப்டன் கேள்வி


sarfaraz-ahmed-criticizes-favoritism

ரோஹித் சர்மா - சர்ஃபராஸ் அஹ்மத் | படம்: ஏபி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Sep, 2018 13:38 pm
  • அ+ அ-

நடந்து வரும் ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி மட்டும் ஏன் அனைத்து போட்டிகளையும் துபாய் மைதானத்தில் விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ஃபராஸ் அஹமத் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை துபாய், அபுதாபி என இரண்டு மைதானங்களில் நடக்கிறது. மற்ற அணிகள் இரண்டு மைதானங்களிலும் மாற்றி மாற்றி விளையாடுமாறு அட்டவணை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி, தனது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் மட்டுமே ஆடுகிறது.

இது குறித்து பேசிய சர்ஃபராஸ் அஹமத், "தொடர் அட்டவணையைப் பாருங்கள். இந்தியா முதல் சுற்றில் ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட துபாயில் ஆடும் விதமாகவே அட்டவணை போடப்பட்டுள்ளது. இங்கு பயணிப்பது ஒரு பிரச்சினை. துபாய்க்கும் அபுதாபிக்கும் இடையே ஒன்றரை மணி நேரம் வெயிலில் பயணித்து அடுத்தடுத்த நாட்கள் போட்டியில் ஆடுவது கடினமானதாகும்.

இந்தியாவோ, பாகிஸ்தானோ, வேறந்த அணியோ, விதி எல்லா அணிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அபுதாபி மைதானத்தில் விளையாட வேண்டும் என்றால் எல்லா அணிகளுமே அங்கு ஒன்றிரண்டு போட்டிகள் ஆட வேண்டும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இது தொடர்பாக என்ன செய்திருக்கிறது என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இது பற்றி விசாரிக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்திய அணி, மூன்று மாத இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு வந்தாலும் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுகின்றன என்ற கருத்துக்கு பதில் சொன்ன சர்ஃபராஸ், "அவர்கள் அடுத்தடுத்து விளையாடலாம் ஆனால் அவர்களின் முதல் போட்டி மற்ற அனைவரும் விளையாடி முடித்த பின் தானே தொடங்கியது?" என்றார்.

உண்மையில் இம்முறை ஆசிய கோப்பை இந்தியாவில் தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட, இந்திய அரசாங்கம் அனுமதிக்காததால், தொடர் துபாயில் நடக்கிறது.

இது பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், "அபுதாபி மைதானத்தை விட துபாய் மைதானத்தின் இருப்பு அதிகம். இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா வங்கதேசம் போட்டிகளில் அரங்கம் நிறைந்து விடும். பிசிசிஐக்கு டிக்கெட் வருவாய் மட்டுமே கிடைக்கிறது. இந்த கூடுதல் வருவாயில் எப்படி சமரசம் செய்து கொள்ள முடியும்? பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து விளையாட முடியாது என்ற காரணத்தால் தான் இந்தத் தொடர் இந்தியாவிலிருந்து துபாய்க்கு மாற்றப்பட்டது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

துபாயில் மட்டுமே இந்திய அணி விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close