[X] Close

பெரிய போட்டிக்கு முன் கடினமான கேள்விகள்: ஹாங்காங் ஆட்டம் குறித்து ஹர்ஷா போக்லே கருத்து


harsha-bhogle-about-honkong-india-match

ஹாங்காங் அணிக்கு எதிராக 116 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் குவித்த தவான் - ராயுடு இணை

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 19 Sep, 2018 12:26 pm
  • அ+ அ-

ஹாங்காங் அணிக்கு எதிராக திணறிய இந்திய அணி கடினமான கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறது என கிரிக்கெட் விமர்சகரும், வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி முதலில் ஆடி 285 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஹாங்காங் அணி மிகச் சிறப்பாக ஆடி விக்கெட் இழப்பின்றி நிதானமான ரன் சேர்ப்பில் ஈடுபட்டது. 34 ஓவர்கள் வரை அந்த அணியின் ஒரு விக்கெட்டைக் கூட இந்தியாவால் வீழ்த்த முடியவில்லை. அந்த நிலையில் ஹாங்காங் அணிக்கு தேவைப்பட்டது 96 பந்துகளில் 112 ரன்கள் மட்டுமே. துவக்க வீரர்கள் இருவருமே அரை சதம் கடந்து நிலையாக ஆடிக் கொண்டிருந்தனர்.

பின் 35-வது ஓவரில் குல்தீப் யாதவ் முதல் விக்கெட்டை வீழ்த்த அங்கிருந்து ரன் சேர்ப்பு கட்டுப்பட்டு, தொடர்ந்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. 50 ஓவர்கள் முடிவில் 259 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளுடன், வெறும் 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் தோற்றது. இந்திய அணியின் சுமாரான பந்துவீச்சும், ஒன்றிரண்டு வீரர்களைத் தவிர மற்ற யாரும் சரியாக பேட்டிங் ஆடாததும் அதிர்ச்சியளித்தது. முக்கியமாக, ஹாங்காங்க போன்ற அனுபவமில்லாத, வளர்ந்து வரும் ஒரு புதிய அணியுடன் இந்தியா போராடி வென்றது அணியின் நிலை குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஹாங்காங் அணிக்கு எதிராகவே இப்படித் திணறிய இந்திய அணி புதன்கிழமை பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் எப்படி ஆடுமோ என்ற கவலையும் இந்திய ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்நிலையில், பிரபல கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "இந்தியாவுக்கு களத்தில் கவலைத் தரும் நாள் போலத் தெரிகிறது. உண்மையைச் சொன்னால் அதை விட மோசமாக. இங்கிருந்து ஆட்டத்தின் முடிவு எப்படியிருக்கிறதோ, ஹாங்காங்க் அணிக்கு கை தட்டுங்கள். இந்திய எப்படியோ வெற்றி பெற்றாலும் நாளை சோர்வடைந்த அணியாக இருக்கப்போகிறது. அன்ஷுமன் ராத், நிசாகத் கான், நன்றாக விளையாடினீர்கள். அற்புதம். என்றும் நினைவில் இருக்கும் நாள்.

கலீல் கவர்ந்துவிட்டார். காயத்துக்குப் பிறகு புவனேஸ்வர் குமார் இன்னும் தயாராகவில்லை என்றால் அவருக்கு ஒரு மாற்றாக அணியில் இருப்பார். புவனேஸ்வர் இன்று சுமாராகவே வீசினார். ஹாங்காங்க் சிறப்பாக விளையாடினீர்கள். இந்தியாவுக்குக் கடினமான ஆட்டம். சில நேரங்களில் (முக்கியமான) பெரிய போட்டிக்கு முன் கடினமான கேள்விகளை எதிர்கொள்வது நல்லதுதான்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close