இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது லீக் போட்டியில் இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மிகவும் முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, இலங்கை அணி வீரர்கள் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளனர்.
நியூசிலாந்தை பொறுத்தவரை வாழ்வா, சாவா என்ற நிலையில் இன்றைய போட்டியில் விளையாட உள்ளது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4ல் தோல்வியும் பெற்றுள்ளது. அரையிறுதிக்கான வாய்ப்பை பெற இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்குகிறது.
இலங்கை அணியை பொறுத்தவரை இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வாய்ப்பு பிரகாசமாகும். இல்லை எனில் படுதோல்வியுடன் உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறுவதுடன், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வாய்ப்பும் பறிபோகும்.