இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 18ம் தேதி சௌராஷ்டிரா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 445 ரன்கள் குவித்திருந்தது.
முதல் இன்னிங்ஸ் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் அடித்திருந்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து அணியில், பென் டக்கட் 153 ரன்கள் குவித்த போதும், அந்த அணி 319 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியில், ஜெய்ஸ்வால் அபாரமாக இரட்டை சதம் அடித்தது அசத்தினார். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்களுக்கு எடுத்திருந்தபோது, கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார். இதையடுத்து 555 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
ஆனால் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர். இறுதியில் மார்க் வுட் மட்டும் சற்று நேரம் போராடி 33 ரன்கள் குவித்தார். அவரும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த நிலையில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இந்திய அணி உள்ளது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த 3வது டெஸ் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இந்தியாவின் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அதேபோல் அறிமுக வீரராக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான், அறிமுக டெஸ்டிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். ஒட்டுமொத்தத்தில் பல்வேறு சாதனைகளை படைத்ததிலும் இந்த டெஸ்ட் ஒரு புதிய சாதனை படைத்திருப்பதாக ரசிகர்களிடையே மகிழ்ச்சி பரவி வருகிறது.